வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்” என எடப்பாடி பழனிசாமி சாடினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொன்விழா கண்ட கட்சி அதிமுக. இக்கட்சி பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. ஆனால், மழை அதிகளவில் பெய்யவில்லை. வெயில்தான் அடிக்கிறது.
இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறினர். தற்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என பொய் கூறிவருகிறார்கள்.
தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது. அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது. அதிமுக பல புயல்களை கண்டது, தானே புயல், ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களை கண்டுள்ளது. அதேவேளையில் புயல் வேகத்தில் மக்களுக்காக பணியாற்றி, அவர்களின் பிரச்சினையை தீர்த்ததுள்ளது. அதிமுகவை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.
தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்தால் எல்லாம் முடிந்து விடுமா? தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் இந்த அரசாங்கம். அதிமுக ஆட்சியில்தான் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை கிடைத்தது. மழைக் காலத்திலும், வெள்ளம் ஏற்பட்ட போதிலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு இழப்பு ஏற்படும்போது உரிய நிவாரணமும் கொடுக்கப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் இப்பிரச்சினை இருந்திருக்காது. அதிமுக பணிகளை திமுக தொடர்ந்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை, ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியேகூட சென்றிருக்க முடியாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து துறைகளையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார்.
அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வர் ஸ்டானின் தொகுதியில் தேங்கியுள்ள நீரே வடியாமல் கிடக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் சென்னையில் உள்ள நீரை எப்படி இவர்கள் வடிய வைக்கப் போகிறார்கள்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.