எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன் விரும்பினால் என்ன செய்வது..! தன்மானம் தான் முக்கியம்..!

‘அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்று நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது, எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி தெவிரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர் விரும்பினால் மட்டும் என்ன செய்வது.

அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நாங்கள் என்றுமே அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. தலைவர்களைப்பற்றி அவதூறாக பேசுகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதனை ஏற்க மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.