“ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசினார். அதன் பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, “சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தமிழகத்தில் பல இடங்களில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எனவே, கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது. பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேய்வது போல் ஒருசில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களை நம்பித் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும் தவெக தான் எதிர்க்கட்சி என அக்கட்சியின் கூட்டத்தில் பேசப்பட்டது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர். அதிமுக இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.