ஊட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை..!

பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்ற நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, உள்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி. இந்நிலையில், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து பல அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த ரஷியா பேகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில் இப்பொழுது முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ரஷியா பேகம் தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்த காலங்களில் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் ரஷியா பேகம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீலகிரி மாவட்ட தலைநகரான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரஷியா பேகம் வசித்து வரும் வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 11 மணி வரை என 6 மணி நேரம் நடந்தது. சோதனையில் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட்சத்திற்கும் மேலாக சொத்து சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.