ஊட்டியில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும். இந்நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார். இந்நிலையில் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 9-ந்தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா தங்கத்தாலியை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காவல்துறை, ஸ்வீட்டி பெட்ரீசியாவிடம் இருந்த தங்கத்தாலியை மீட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.