உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, அலுவலக பணிகள் என்று சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் இவற்றில் 75 சதவீதம் பேர் தினக்கூலி வேலை செய்து வருகிறார்கள். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தினக்கூலியாக வேலை செய்துவரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சுயஉதவிக்குழு, ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளில் பணியாற்றி வரும் அனைவரையும் நேரடி பணியாளர்களாக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்-பெண் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர்.