உளவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி.. பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த போலி ஐஏஎஸ் கைது..

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் சின்னக்கண்ணு தோப்பை சேர்ந்த கிருஷ்ணவேணி ஸ்ரீரங்கம் மாணிக்கம்பிள்ளை தெருவில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தார். அப்போது தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கிருஷ்ணவேணியிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரது கடைக்கு பிரகாஷ் வந்து சென்றதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கிருஷ்ணவேணியின் மகனுக்கு இந்திய உளவுப்பிரிவான ‘ரா’ பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். இதை நம்பிய கிருஷ்ணவேணி, 2021-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் பிரகாஷ் கூறியவாறு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ணவேனி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ், போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதும், சிதம்பரம் வைகை நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவர, இதையடுத்து நேற்றுமுன்தினம் சிதம்பரம் சென்ற காவல்துறை, பிரகாஷை கைது செய்தனர்.