உயிரோடு இருப்பவருக்கு இறந்ததாக ஆவணம்..! ஓய்வூதியம் கேட்டு டெல்லிக்கு படையெடுத்த ராஜஸ்தான் பெண்கள்..!

உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணங்களில் உள்ள நிலையில் தங்களுக்கு ஓய்வூதியமும், நீதியும் கேட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் டெல்லி வந்துள்ளனர். பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலம் சதரன் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த ஜம்கு தேவி கடந்த 2022-ஆம் ஆண்டு வரை, முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. இதுதொடர்பாக தனது கிராம நிர்வாக அதிகாரியைக் கேட்டபோது, இவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் உள்ளதென்றும், அதனால்தான் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

தான் உயிருடன் இருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணம் பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் கடந்த 21 மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நடையாய் ஜம்கு தேவி நடந்து நடந்தார். இந்நிலையில் இவர் உரிய நீதி கேட்டும், முதியோர் ஓய்வூதியம் வழங்கக் கோரியும் அவர் டெல்லியில் நடைபெற்ற முதியோர் ஓய்வூதியம் குறைதீர்ப்பு தொடர்பான கூட்டத்துக்கு வந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜம்கு தேவி பேசுகையில், “கணவர் இறந்த பின்னர், என்னிடம் உள்ள ஆடுகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். திடீரென முதியோர் ஓய்வூதியத்தை நிறுத்தியதால் கடும் அவதி பட்டுக் கொண்டுள்ளேன். அதிகாரிகளை கேட்டால் அங்குபோ , இங்குபோ என இழுத்தடித்து கொண்டுள்ளனர். அதனால்தான் எனது புகாரை பதிவு செய்ய டெல்லி வந்தேன்” என தெரிவித்தார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் இதுபோன்ற தவறான ஆவணப் பதிவால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் இறந்ததாக பதிவு செய்யப்பட்டதால் அவர்களுக்கு வந்து கொண்டிருந்த முதியோர் பென்ஷன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல ஆஜ்மீரைச் சேர்ந்த காஞ்சன் தேவி பேசுகையில், “நான் எனது கணவரை இழந்துவிட்டேன். 30 மாதங்களுக்கு முன்பு எனது விதவை ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. நான் இறந்ததாக கிராமத்தில் உள்ள ஆவணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் கேட்டால், புதிதாக பென்ஷன் கணக்கு தொடங்குமாறு கூறுகின்றனர் என காஞ்சன் தேவி தெரிவித்தார்.

பீவார் மாவட்டம் மொஹல்லா நரசிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்த குடியா பேசுகையில், “நான் ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த 2023 ஜனவரி வரை எனக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் கிடைத்து வந்தது. ஆனால் ஜனவரி மாதம் திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவணத்தில் எனது முகவரி மாற்றப்பட்டு விட்டதாகவும், நான் வேறு மாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் ஆவணங்களில் உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், நான் ராஜஸ்தானில்தான் இருக்கிறேன். ஓய்வூதியம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறேன் என மாற்றுத்திறனாளி தெரிவித்தார்.

பீவார் மாவட்டம் பியாகேடா பகுதியைச் சேர்ந்த கெலி தேவி கூறும்போது, “எனக்கும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. எனது ஓய்வூதியம் ஆணை நகலை, மற்றொரு பெண்ணின் வங்கிக் கணக்குடன், இ-மித்ரா மைய ஊழியர் தவறுதலாக இணைத்துவிட்டார். சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு உள்ள பெண் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார். இதனால் எனக்கு ஓய்வூதியம் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு நிர்வாகப் பிரச்சினைகள், அதிகாரிகள் செய்யும் தவறுகள், தொழில்நுட்பத் தவறுகளால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.

இவர்கள் டெல்லியில் நடைபெற்ற ஓய்வூதியம் குறைதீர்ப்புத் தொடர்பான கூட்டத்தில் தங்களது குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியிலுள்ள ஓய்வூதியம் பரிஷத், மஸ்தூர் கிஸான் சக்தி சங்கடன் அமைப்புகள் நடத்தின. ராஜஸ்தான் மாநிலத்தில் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.