“ஈசிஆர் போறேன்.. வரியா?” அகில பாரத இந்து மக்கள் அமைப்பு நிர்வாகி கைது..!

கடந்த ஆண்டு பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில நிர்வாகி சுந்தரம் என்ற மாயாஜி சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞரை பாலியல் சீண்டல் செய்தவரை கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் வெளியே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியே காரில் சென்ற அகில பாரத இந்து அமைப்பின் நிர்வாகி மாயாஜி அந்த பெண் வழக்கறிஞர் நின்ற இடத்துக்கு அருகே காரை நிறுத்தியுள்ளார். பெண் வழக்கறிஞரிடம் தகாத வார்த்தைகளால் பேசிய மாயாஜி, “ஈசிஆர் போறேன்.. வரியா?” என ஆபாச தொனியில் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வழக்கறிஞர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண் சத்தம் போட்டு அருகில் இருப்பவர்களை அழைத்ததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் மாயாஜி. இதனையடுத்து அந்த பெண் வழக்கறிஞர், இது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறிய மாயாஜி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்தனர். கார் எண் மூலம் சம்பந்தபட்ட நபரை காவல்துறை தேடினர். அவர், அகில பாரத இந்து அமைப்பின் மாநில நிர்வாகி என்பது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்று மாயாஜி கைது சிறையில் அடைத்தனர்.