இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி IT பெண்ணிடம் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் எட்டரை பவுன் நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முன் பின் தெரியாத நபர்களிடம் பழகும்போது தங்களது சுய விவரங்கள் குறித்து பகிரக் கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று சிலர் சமூக வலைத்தளங்களில் நண்பர்களாகப் பழகி பின்னர் காதல் வலையில் விழுந்து அதன் மூலம் பல மோசடி சம்பவங்கள் அரங்கேறுவது வாடிக்கையாக நடைபெறுவது வேதனையாக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் டைடல் பார்க்கிலுள்ள IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இளம்பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக கோயம்புத்தூர் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாக்ய அருண் என்பவர் அறிமுகமாகி உள்ளார். முதலில் நட்பாகப் பழகி வந்த பாக்ய அருண், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதையடுத்து, அருணை நம்பி அந்த இளம்பெண்ணும் பழகி வந்துள்ளார். பாக்ய அருண் தான் சுயதொழில் செய்து வருவதாக கூறியுள்ளார். பின்னர், தனது சுய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவ்வப்போது பணம் பெற்று வந்துள்ளார். இளம்பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக பணம், நகை என ஒட்டுமொத்தமாக எட்டரை சவரன் நகை மற்றும் மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை அந்த இளம்பெண் பாக்ய அருணிடம் கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் அப்பெண்ணிடம் தனது நடவடிக்கையை பாக்ய அருண் மாற்றியது மட்டுமின்றி இளம் பெண்ணுடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார். இந்நிலையில், தன்னிடம் பெற்ற நகை மற்றும் பணத்தை அந்த இளம்பெண் அருணிடம் திருப்பி கேட்டுள்ளார். அப்போது, பாக்கிய அருண் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியும், பணம் நகையைக் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாக்கிய அருணை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.