உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இதில் சமீப நாட்களாக டெல்டா, டெல்டா பிளஸ் என 2 மாறுபாடு அடைந்த வைரஸ்கள் பரவலாக கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் டெல்டா வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது ஆகும்.
இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரசை விட அதிக வேகமாக பரவும் திறன் வாய்ந்தது ஆகும். இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்டா பிளஸ் தொற்று பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த தொற்றுகள், அரசுகளை கவலையுற வைத்துள்ளன.
குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலைக்கு காரணமாகி விடும் என்றும் அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட 45 ஆயிரம் மாதிரிகளில் மகாராஷ்டிரா 22 பேர், தமிழ்நாட்டில் 9 பேர், மத்திய பிரதேசம் 7 பேர் கேரளா 3 பேர், பஞ்சாப், குஜராத்தில் தலா 2 பேர், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், காஷ்மீர் மற்றும் கர்நாடகா, அரியானா தலா ஒருவர் என மொத்தத்தில் 51 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.