சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறி விட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் வேலைக்காக தனித்து வசிப்போர் மட்டுமே அங்கிருப்பதாக கூறப்படுகிறது.
வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கேரளாவில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் மருத்துவம் படிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் தனி வார்டில் அவர் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா கூறியுள்ளார். இதுபோல் சீனாவிலிருந்து பீகார் திரும்பிய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால். இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.