டெல்லியில் காணாமல்போன பெண் ஒருவரை ஆஜர்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான அப்பெண் தனக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறினார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கெனவே திருமணம் ஆன உறவினர் ஒருவர் தனக்கு திருமணமாகவில்லை என்ற பொய்யான தகவலை கூறி அப்பெண்ணை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. டெல்லி மாளவிகா நகரில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் பிரதிபா எம். சிங், அமித் ஷர்மா ஆகியோரை கொண்ட அமர்வில், இந்த வழக்கில் பெண்ணின் உறவினர் தனக்கு திருமணமாகவில்லை என்று ஆரிய சமாஜ்கோயிலில் பொய்யாக அறிவித்தது சட்டத்துக்கு முரணானது. எனவே இத்திருமணம் செல்லாது. திருமண சாட்சிகளின் உண்மை தன்மையை ஆரிய சமாஜ் கோயில் நிர்வாகம் இனிமேல் சரிபார்க்க வேண்டும். இரு தரப்பு திருமண சாட்சிகளில் குறைந்தபட்சம் தலா ஒருவர் உறவினராக இருக்க வேண்டும். உறவினர் இல்லை எனில் நீண்டகாலம் அறிந்தவராக இருக்க வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.