ஆம் ஆத்மி தகவல்: அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை பதவி விலகல்..!

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘ஆளுநரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளார். அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்’ என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “அடுத்த 2 நாட்களில் டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.

எனவே, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதலமைச்சர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைக்கிறார்களா என்பதை அவர்களிடமே கேட்பேன். நான் நேர்மையானவன் என கருதி மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதலமைச்சராக்கிய பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன்” என அறிவித்தார்.

இதனையடுத்து, ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும், அப்போது, முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.