நமது அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், குண்டூர், பல்நாடு, பிரகாசம், விசாகப்பட்டினம், நந்தியாலம், கோதாவரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் என்டிஆர் மாவட்டத்தில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து குண்டூர் மாவட்டத்தில் 7 பேரும் பல்நாடு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் முழுவதும் 1,69,370 ஏக்கர் உணவுப் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. 18,424 ஏக்கர் பரப்பளவில் பூச்செடிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் 2.34 லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். வெள்ளத்தால் 6.44 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42,702பேர் 193 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்மைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் மருத்துவ முகாம் இருப்பது அவசியம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக தலா 25 கிலோ அரிசி, ஒரு லிட்டர் பாமாயில், 2 கிலோ வெங்காயம், 2 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கிலோ சர்க்கரையை உடனடியாக வழங்கிட வேண்டும். வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி உடனே வழங்கிட வேண்டும்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.