‘ஆதித்யா-எல்1’| சூரியனை நோக்கி பிஎஸ்எல்வி-சி57 விண்ணில் சீறிப் பாய்ந்தது …!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஏவப்பட்டத்தில் இருந்து மூன்று படிநிலைகளை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அது சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவது இன்னும் ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்படும். இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையும்.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ளும்.