வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிடும்போது, அந்தக் காளை அதுவரை பிடிபடாத காளையாக இருந்தால் அதன் பெருமைகளைச் சொல்வதுடன், உரிமையாளரின் பெயரையும் வர்ணனையாளர்கள் அறிவிப்பார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியென்பது ஆண்களால் ஆண்களுக்காகவே நடத்தப்படும் விளையாட்டு என்ற நிலை முன்பு. இதுவரை பெரும்பாலும் உரிமையாளரின் பெயர் ஆண்களாகத்தான் இருந்து வந்தது. அண்மைக்காலமாக காளைகளின் உரிமையாளர்களின் பெயரில் பெண்களும் இடம் பெறத் தொடங்கிவிட்டனர்.
தற்போது பெண்கள் பலரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தங்களின் பங்களிப்பை தரத் தொடங்கி விட்டனர். ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, பயிற்சி அளித்து வாடிவாசலில் களமிறக்குவதில் பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் விரைவில் இடம்பெற உள்ளார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. இவர் வளர்க்கும் காளைக்கு ‘ராமு பையா’ என்று பெயர்.
இந்தக் காளையை கடந்த 10 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இக்காளையை களமிறக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இதுவரை யாரிடமும் பிடிபடாத எனது காளை வாஷிங் மெஷின், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பட்டுச் சேலைகள் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளது. இதுவரை எந்தவொரு போட்டியிலும் வீரர்களால் இந்தக் காளையை அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.