அரியலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இன்று அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு பணிக்கான திறன் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாணவ மாணவிகளிடம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகள், வன்கொடுமை மற்றும் தீருதவி பற்றியும், பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை, தாட்கோ உதவி திட்டங்கள், தொழிற் பயிற்சிகள், கடன் உதவி சலுகைகள் பற்றியும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், தீண்டாமை நடைபெறாமல் தடுப்பதற்காகவும் அரசின் துறைகள் என்னென்ன செயல்படுகிறது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் துண்டு பிரசுரங்களாக வழங்கப்பட்டன. சமுதாயத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும், போக்சோ சட்டம், குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, SC/ST க்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பதற்கான உதவி எண் 14566, இணையவழி புகார் உதவி எண் 1930, பெண்கள் பாதுகாப்பு உதவி 181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண் : 1098, மற்றும் மதுவிலக்கு தொடர்பான புகார் உதவி எண் :10581 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.