அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் கொண்டு செல்லப்படும் குழந்தை ராமர் சிலை..!

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான பூஜைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிராண பிரதிஷ்டை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரபேந்திர மிஸ்ரா, “ஜனவரி 22-ம் தேதி நண்பகல் 12.30 மணிதான், பிராண பிரதிஷ்டை செய்வதற்கான முகூர்த்தம். இதற்கான வழிபாடுகள், சடங்குகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

குழந்தை ராமர் விக்ரகம் நாளை காலை கருவறைக்குள் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அப்போது, சிலைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்படும். மற்ற சடங்குகளும் மேற்கொள்ளப்படும். ராமர் சிலைக்கு மட்டுமல்லாது, கோயிலில் உள்ள வேறு தெய்வச் சிலைகளுக்கும் இந்தச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறுதியாக, புனிதமான நேரம் வரக்கூடிய, வரும் 22-ம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்படும்” என தெரிவித்தார்.