அம்மாதான் பொது செயலாளர்.. ஜெயலலிதா சமாதியில் தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே உள்ள மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. இந்நிலையில் நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து தனித்தீர்மானம் நிறைவேற்றக் கூடும் என சொல்லப்படுகிறது.

அந்த தீர்மானத்தை வைத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்பது ஓபிஎஸ் தரப்பின் வாதமாக இருக்கிறது. அவ்வாறு புதிய பதவியை உருவாக்குவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருநது வருகிறது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்க மறுத்து திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்கிறார்கள். இதையடுத்து ஓபிஎஸ் ஆவடி ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என கூறியே ஓபிஎஸ் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென அதிமுக தொண்டர்களில் சிலர் ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு அவரது சமாதியில் மெழுகுவர்த்தி ஏத்தி வைத்து அதிமுகவை காப்பாற்றுங்கள் என கூறி ஒப்பாரி வைத்தனர்.

பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவரை தவிர எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி அழுதனர். பின்னர் வந்திருந்த தொண்டர்களில் மண்ணெண்ணெய் கேனை திறந்து மேலே ஊற்ற முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்,இதனால் ஜெயலலிதா சமாதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.