“போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. 1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். இத்தனை தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அப்போது, “போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. காவல்துறை, கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை நேய தமிழகமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 84 கோடியே 91 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது,” என கீதாஜீவன் தெரிவித்தார். இந்நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன்,கைத்தறி மற்றும் கைத்திறன் துணி நூல் துறை செயலர் அமுதவல்லி, சமூகநலத்துறை ஆணையர் லில்லி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.