காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் போன்றவற்றை வழங்கினர்.
5 பேருக்கு இலவச தையல் எந்திரங்களும், 5 பேருக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, பெண்கள் கல்வி கற்கவும், பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.
1989-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.இன்று 8 கிராம் தங்கமும், திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியின் போதெல்லாம் இந்த திட்ட மனு பெறப்பட்ட 2 அல்லது 3 மாதங்களில் நிதியுதவி வழங்கப்பட்டு விடும். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்களுக்கு நிதியுதவி வழங்காமல் நிலுவையாக வைத்து விட்டு சென்றுள்ளனர் என தெரிவித்தார்.