அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி என்பவர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 3 முறை தாம் கருக்கலைப்பு செய்ததாகவும் இதுதொடர்பாக தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அடையாறு காவல்துறையினர் மணிகண்டனுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வரை அவரை கைது செய்ய கூடாது என்று ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் சார்பில், 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி பின்னர் அரசியலுக்கு வந்ததாகவும், இந்த குற்றச்சாட்டை பொறுத்தவரை அவர் திருமணமானவர் என்று தெரிந்தே நடிகை சாந்தினி தன்னுடன் குடும்பம் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருவே ஏற்படாத போது எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை பொறுத்தவரை தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் திருமணம் செய்து கொள்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால் உறவுக்கு அளிக்க ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை பொறுத்தவரை ஒரு எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.