அதிமுக ஒன்றிய செயலாளர் விஷம் குடித்து தற்கொலை கந்துவட்டி காரணமாக மனஉளைச்சல்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் இவருடைய மனைவி சரிதா. இதில் பிரகாஷ், அதிமுக கட்சியின் அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தியும் வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் தன் மனைவியுடன் காரை எடுத்துக் கொண்டு எளாவூர் ஒருங்கணைந்த சோதனைச் சாவடி அருகே சென்றுள்ளார். பின்னர், காரை நிறுத்திவிட்டு இருவரும் தாங்கள் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளனர்.

பின்னர், பிரகாஷ் தனது அண்ணனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தானும் தனது மனைவி சரிதா இருவரும் விஷம் குடித்ததை சொல்லிவிட்டு, தோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் இருவருக்கும் முதலுதவி செய்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆரம்பாக்கம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பிரகாஷ்-ன் மரண வாக்கு மூல கடிதம் மற்றும் வீடியோ காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதில், 2017-ம் ஆண்டு சொந்தமாக கார் ஒன்று ஃபைனான்ஸ் மூலமாக வாங்கினேன். அதற்கு முதல் டியூ கட்டுவதற்காக கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தசரதனுடைய மகன் ராஜா (எ) முனுசாமியிடம் முதலில் ரூ.30,000 வட்டிக்கு வாங்கினேன். அப்படியே, ஒரு ஆண்டுகளாக சிறுக சிறு மொத்தம் ரூ.1,10,000 வட்டிக்கு வாங்கினேன். இதில், 2020 வரை மாதந்தோறும் ரூ.11,000 வட்டி கட்டி வந்தேன். அதைத்தொடர்ந்து 2020 ஏப்ரல் மாதம் கொரோனா தொடங்கியவுடன் என்னால் வட்டி கட்ட முடியவில்லை.

இதனையடுத்து ராஜா அக்கம்பக்கத்தினர் மற்றும் கட்டபஞ்சாயத்து செய்பவர்களுடன் சேர்ந்து என்னை அசிங்கப்படுத்தினார். இதனால், நான் பல முறை அவரால் மனஉழைச்சலுக்கு ஆளானேன். கொலை மிரட்டல் விடுத்தும் என்னை துன்புறுத்தினார். இதனால் மனமுடைந்த நான் என்னுடைய மனைவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவிற்கு ராஜா (எ) முனுசாமி என்பவர் தான் காரணம் என அந்த வீடியோ மற்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் நேற்று மாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவருடைய மனைவி சரிதா உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.