அதிகாரிகள் மெத்தனத்தால் தொடரும் சோகம்: புதை மணல் குறித்து அபாய எச்சரிக்கை பலகைகள் எங்கே..!? இனியாவது அபாய எச்சரிக்கை பலகைகள் பளிச்சிடுமா..!?

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் மகன் சஞ்சய் கூடலூர் அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் சஞ்சய் திருப்பூர் மாவட்டம் அவினாசி வேலாயுதம்பாளையம் ராயர் கோவில் வீதியில் வசித்து வரும் உறவினரான ஞானசேகர் வீட்டில் நிலையில், ஞானசேகரின் மகன்கள் தினேஷ், பிரவின் ஆகியோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்து இருந்தனர்.

அவர்களுடன் சஞ்சய்யும் கோவிலுக்கு வருவதாக கூறியதை தொடர்ந்து சஞ்சய், தினேஷ், பிரவீன் உள்பட 8 பேர் கொண்ட முருக பக்தர்கள் அவினாசியில் இருந்து பழனிக்கு நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்களில் 5 பேர் தாராபுரத்தில் உள்ள அமராவதி புதிய ஆற்றுப்பாலத்தை கடந்து சற்று தொலைவு முன்னால் சென்று விட்டனர். சஞ்சய், தினேஷ் மற்றும் பிரவீன் ஆகிய 3 பேரும் அவர்களை தொடர்ந்து சென்றனர். அவர்கள் அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும் போது ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் அதில் குளிக்க ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக புதை மணலில் சஞ்சய் சிக்கிக்கொண்டார். இதனால் சஞ்சய் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபாய குரல் எழுப்ப உடனே தினேஷ் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரும் சஞ்சயை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் சஞ்சயை காப்பாற்ற முடியவில்லை.

இதனையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு துறை வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று நீரில் மூழ்கிய சஞ்சயை தேடிய நிலையில் இரவு 7 மணியளவில் சஞ்சய் உடல் மீட்கப்பட்டது். பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.