கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.’
‘
”அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள்.”
”அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”
”’ஏ, தாழ்ந்த தமிழகமே!’ என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.”