திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, தாளக்கடை பகுதி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சங்கர் மகன் வெள்ளையன். இவர் திண்டுக்கல் அடுத்துள்ள தவசிமடையை சேர்ந்த சவேரியார் என்பவர் சிறுமலை, தாளக்கடை பகுதியில் சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார். தோட்டத்தில் வாழை, பலா, சௌசௌ உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளையன் அடிக்கடி சவேரியார் தோட்டத்தில் நுழைந்து விற்பனைக்கு தயார் நிலையிலிருந்த பழங்களை பறிப்பதை வழக்கமாக வைத்தாக சொல்லப்படுகிறது.
இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே முன்பகை இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சவேரியார் தோட்டத்தின் வழியாக நேற்று இரவு 3 மணிக்கு வெள்ளையன் நடந்து சென்றதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சவேரியார் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி வைத்து வெள்ளையனை சுட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் வெள்ளையனின் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு நிலைகுலைந்து அந்த இடத்திலேயே விழுந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த வெள்ளையனை அவரின் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த வெள்ளையனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை பாதிக்கப்பட்டவர் தற்போது நலமாக இருப்பதாகவும், தலைமறைவாகியுள்ள நில உரிமையாளர் சவேரியாரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.