பழைய பேருந்து நிலையத்துக்குள் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால், நாமக்கல் மாநகர பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் கடந்த 10-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்தினுள் நகர பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் புறநகர் பேருந்துகள் முழுவதும் வருவதில்லை. இதன் காரணத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்த நபர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக வணிகர் சங்கத்தினர் புகார் எழுப்பியுள்ளனர்.
இதற்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்தது. இப்போராட்டத்திற்கு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் நகர ஹோட்டல்கள், பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்கம், பேக்கரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம்,மளிகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோமொபைல் சங்கம், மருந்து வணிகர் சங்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதன்படி இன்று காலை 6 மணி முதல் நாமக்கல் மாநகரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மருந்து கடைகள், பூ மார்க்கெட் உள்ளிட்டவை முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் பரபரப்பாக காணப்படும் பழைய பேருந்து நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கடையடைப்பு போராட்டம் மாலை 6 வரை நடைபெற உள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்குள் புறநகர் பேருந்துகள வந்து செல்ல வேண்டும். பழைய பேருந்து நிலையத்திற்குள் கடை நடத்துபவர்களின் வாழ்வாதரம் பாதுக்காக்கப்பட என்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.