அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.
அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.
தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.
மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.