நம் நாட்டின் 138 கோடி மக்களில் ஒட்டுமொத்த கனவையும் சுமந்து கொண்டு T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜூன் மாதம் சென்ற இந்திய அணி இன்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெறும் கையை ஆட்டிக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இது ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் உலகில் ஆஃப் சைட்டில் எத்தனை பீல்டர்களை நிறுத்தி வைத்தாலும், துல்லியமாக பவுண்டரிகளை அடிக்கும் திறமைப் படைத்தவர், “ஆஃப் சைட் கிங்” என செல்லமாக அழைக்கப்பட்டவர் உலகின் தலைச் சிறந்த ஸ்பின்னர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னேவும் கூட பயப்படும் அளவிற்கு இறங்கி வந்து அடித்தால், பந்து மைதானாத்திற்கு வெளியே பறக்கும் அளவிற்கு சிக்ஸர் விளாசுவதில் கில்லாடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்திய அணியின் ஆக்ரோஷமான தலைவர் “தாதா” சவுரவ் கங்குலி.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்வதை போல 1980 -2000 கால கட்டத்தில் இந்திய அணி பல நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் “தாதா” சவுரவ் கங்குலி தலைமயிலான இந்திய அணி. அதன்பின்னர் இந்திய அணி கொஞ்சம், கொஞ்சமாக செதுக்கப்பட்டு யார் யாரிடம் உதை வாங்கினோமோ அவர்களுக்கெல்லாம் அவர்களின் சொந்த மண்ணிலேயே அவர்களை மண்ணை கவ்வ வைத்து வெற்றிகள் பல பெற்று கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்பவர் இன்றைய ஆக்ரோஷமான தலைவர் விராட் கோலி.
1988-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி தலைநகர் டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் பிரேம் கோலிக்கும், சரோஜ் கோலிக்கும் மூன்றாவது குழந்தையாக விராட் கோலி பிறந்தார். தனது 3 வயதில் கிரிக்கெட் மட்டையை தூக்கியவர் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான டெல்லி அணி சார்பாக முதல் தர போட்டியில் களம் கண்ட விராட் கோலி ஆக்ரோஷம், அதிரடி என தனது திறமையை நாளுக்கு நாள் மேருகேற்றி மலேசியாவில் 2008- ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமையேற்று, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.
உலகக் கோப்பையை வென்றுகொடுத்த கையோடு இந்திய சீனியர் அணிக்காக 2008 ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் விராட் கோலிக்கு துவக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு 19 -வது வயதில் கிடைத்தது.
2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகளில் நடைபெற்ற 10-வது உலக கோப்பை போட்டியில் வங்காளதேசத்திடம் முந்தைய உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்கும் விதமாக ஷேவாக் 175 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் விளாச இந்திய அணி 4 விக்கெட்டு 370 ரன்கள் குவித்தது.
மேலும் அதே உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்கின. ‘டாஸ்’ போடப்பட்ட போது இலங்கை கேப்டன் சங்கக்கரா என்ன கேட்டார் என்பது சரியாக காதில் விழவில்லை என்று போட்டி நடுவர் கூறியதால் குழப்பம் ஏற்பட்டு, அதன்பிறகு 2-வது முறையாக ‘டாஸ்’ சுண்டிய வினோதம் அரங்கேற ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18) என ஆட்டமிழந்து வெளியேற விராட் கோலி, கவுதம் கம்பீருடன் இணைந்து விளையாட இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்ததன் விளைவு பல கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2012 -ம் ஆண்டு அதாவது தனது 20 வயதில் விராட் கோலி ஒரு நாள் பன்னாட்டு போட்டிகளுக்கு உதவித் தலைவரானார். 2013 -ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து, அதன்பின்னர் 2014-ம் ஆண்டு விராட் கோலி இந்திய அணியின் தலைவர் ஆனார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியை முதல் இடத்திற்கு அழைத்து சென்றார்.
விராட் கோலி தலைமையில் விளையாடிய 65 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி 38 வெற்றிகள், 16 தோல்விகள் மற்றும் 11 போட்டிகள் டிராவிலும் முடிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகக் கோப்பை போட்டி என்றாலே சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிரான டாப் ஸ்கோரராக இருப்பார். ஆனால் அவருக்குப் பிறகு 2012, 2014, 2016, 2021 T -20 உலகக் கோப்பை போட்டிகள், 2015 உலகக் கோப்பை போட்டி என பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் விராட் கோலி தான் இந்தியாவின் டாப் ஸ்கோரர்.
ஆண்டுதோறும் ICC அறிவிக்கும் ஆண்டின் சிறந்த அணியில் விராட் கோலி தொடர்ந்து ஒன்டே டீமில் 6 முறையும், டெஸ்ட் டீமில் 3 முறையும் இடம்பெற்று அசத்தியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி-20 உலகக் கோப்பை அனைத்திலும் இந்திய அணியை வழிநடத்திய முதல் தலைவர் விராட் கோலி தான்.
தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 38 சதங்கள், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர்களில், 6 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய முதல் இந்தியர், அனைத்து வகை போட்டிகளிலும் சராசரியாக 55 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீரர் என்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது சதங்களையும், சாதனைகளையும் விராட் கோலி அடுக்கினார்.
இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000, 10000, 12000 ரன்களைக் கடந்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23000 ரன்களைக் கடந்ததும் விராட் கோலி தான். டிசம்பர் 18-ம் தேதி விராட் கோலியின் தந்தை இறந்த நாள் மற்றும் சர்வதேச அரங்கில் விராட் கோலி அறிமுகமான நாள் ஆகஸ்ட் 18, 2008 ஆண்டு ஆகையால் இதனை நினைவு கூறும் விதமாக ஜெர்ஸி எண் 18 என்ற எண்ணைத் தேர்வு செய்து இருக்கிறார்.
இந்தியாவின் மிகச் சிறந்த தலைவர்களான தாதா சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி இருவரும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் அடித்தது பெஸ்ட் ஸ்கோராக இருக்க, விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் அடித்து பெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தார். இன்றும் பல கிரிக்கெட் வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸோடுவை ஜாம்பவானாக பார்க்கும் நிலையில் விவியன் ரிச்சர்ட்ஸோடோ நான் என்னைப் பார்க்கிறேன் என தெரிவிக்கும் அளவிற்கு விராட் கோலி சிறந்த வீரராக திகழ்கிறார் .
எத்தனையோ சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி தலைமயிலான இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. மேலும் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது மிகுந்த வேதனையை கொடுக்கும் செயலாகும்.
இந்நிலையில், 7-வது T 20 உலக கோப்பை போட்டியில் குரூப்-2 பிரிவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இந்திய- பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்ய தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்க ஷாகின் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேற மீண்டும் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரில் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலியின் 5.4 ஓவரில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட், விராட் கோலியுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 151 ரன்கள் எடுத்தது.
152 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். மாயாஜால ஸ்பின்னர் என்று இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகம்மது ஷாமி ஆகியோரின் பந்துவீச்சை சிதறடித்த பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மாற்றி அமைத்தது.
அடுத்து நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்ப அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெறும் கையை ஆட்டிக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் தலைவராக இருந்த யாருமே டீம் இந்திய அணியில் தலைவராக இருந்தது இல்லை என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஆனால் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று சாதித்துக் காட்டிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இன்று சாதிக்க முடியாமல் போனதோ..!