IPL 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி..!

IPL 2025 சீசனின் நாளாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 18-வது IPL 2025 சீசனின் நாளாவது போட்டி விசாகப்பட்டினம் ACA சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக எய்டென் மார்க்கரம் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 4.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 13 பந்துகளில் 15 ரன்கள் அடித்த எய்டென் மார்க்கரம் விப்ராஜ் நிகமிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மிட்செல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதற அடிக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 11.4 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் எடுத்தபோது முகேஷ் குமாரிடம் ஆட்டமிழந்தார் , அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பந்த் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க நிக்கோலஸ் பூரான் 30 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்கள் என 75 ரன்கள் எடுத்தார்.

அதே போன்று டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது.

இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர் மற்றும் பாஃப்’ டு பிளெசீ களமிறங்கினர். ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்கமே மிக மோசமாக அமைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரின் 3 -வது பந்தில் ஜேக் ஃப்ரேசர் 1 ரன் எடுத்து நடையை கட்ட 5 -வது பந்தில் அபிஷேக் போரெல் ஷர்துல் தாக்கூரிடம் ஆட்டமிழந்து டக்அவுட் வெளியேற முதல் ஓவர் முடிவில் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய சமீர் ரிஷி 4 ரன்கள் எடுத்திருந்த போது 1.4 ஓவரில் மணிமாறன் சித்தார்திடம் ஆட்டமிழந்து வெளியேற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏழு ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து பாஃப்’ டு பிளெசீ மற்றும் கேப்டன் அக்சர் பட்டேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தனர். ஓரளவுக்கு அதிரடி காட்டத் தொடங்கிய அக்சர் பட்டேல் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பாஃப்’ டு பிளெசீ 29 ரன்களில் வெளியேற 12.3 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 113 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 45 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் தோல்வி உறுதி என எதிர்பார்த்த நிலையில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஆஸ்டோஷ் சர்மா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சில் வான வேடிக்கை காட்டினார். இவருடன் சேர்ந்து விபராஜ் நிகம் அதிரடியாக விளையாடினர். கடைசி 27 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் கடைசி மூன்று ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டபோது ஆஸ்டோஸ் சர்மா 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 18 ரன்களை எடுத்தார்.

இதனால் இலக்கு 12 பந்துகளுக்கு 22 ரன்கள் என மாறியது. 19 வது ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அடிக்க கடைசி ஓவரில் வெறும் ஆறு ரன்கள் தான் தேவைப்பட்டது.இதில் மூன்றாவது பந்தில் ஆஸ்டோஷ் சர்மா சிக்சர் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.