இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதனை இனப்படுகொலை என துருக்கி அதிபர் ரெசேப் தயிப் எர்டோகன் விமர்சனம் செய்து இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்த நிலையில் கடந்த ஆண்டு போராக மாறியது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு நுழைந்து தாக்குதல் நடத்தி 240க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் தற்போது ஓராண்டை கடந்தும் நடந்து வருகிறது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் உள்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7 -ஆம் தேதி முதல் தற்போது வரை இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் மொத்தம் 43,712 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1 லட்சத்த 3,258 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் மீது இஸ்லாமிய நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா ஏற்கனவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. சவூதி அரேபியாவும், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்கும் வரை சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் எந்த உறவையும் வைக்காது என்று அறிவித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது துருக்கியும், இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது. இதனை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து துருக்கி தெரிவித்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பாக துருக்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக துருக்கி அதிபர் ரெரேசப் தயிப் எர்டோகன் பேசுகையில், துருக்கி அரசு இஸ்ரேலுடன் எந்த வகையான தொடர்பு மற்றும் உறவையும் வைத்து கொள்ளாது. இதுதொடர்பாக ஆளும் எங்களின் கூட்டணி அரசு சார்பில் தீர்மான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை தான் நாங்கள் எதிர்காலத்திலும் தொடருவோம். இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலை தொடரும்போது இன்னும் நிலைமை என்பது மோசமாகும்” என்று கவலை தெரிவித்தார்.