பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 8-வது நாளான இன்று காலையிலேயே இந்தியாவுக்கு ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் மனீஷ் நர்வால், சிங்ராஜ் அடானா ஆகியோர் பங்கேற்றனர். சிங்ராஜ் 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், வருண் பாட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தொடக்கம் முதலே தொடர்ந்து மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருவரும் 1.73 மீ, 1.77மீ, 1.80 மீ, 1.83 மீட்டர் தூரத்தை தாண்டி முதலிடத்திற்கு போட்டி போட்டு வந்தனர். ஆனால் வருண் பாட்டி 1.80 மீட்டர் உயரத்தை தாண்ட முடியாமல் வெளியேறினார். இறுதியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் இருவருமே சறுக்கலை சந்தித்தனர். 1.86 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தங்கவேலு தாண்டிவிட்ட நிலையில் ஷரத் குமார் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை.

இதனால் மாரியப்பன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சேம் க்ரேவ் அகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். பரபரப்பு போட்டி இறுதியில் 1.88 மீட்ட உயரத்தை மாரியப்பனால் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் சேம் க்ரேவ் தனக்கு வழங்கப்பட்ட 3வது வாய்ப்பில் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியானது. 3வதாக வந்த ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 8 வது நாளான இன்று இந்திய ஷூட்டிங் குழுவினரின் அற்புதமான ஓட்டத்தை தொடங்கினர். இதில் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ் அதானா ஆகியோர் அசாகா ஷூட்டிங் ரேஞ்சில் நடந்த ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இல் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றனர். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த மணீஷ் நர்வால், இறுதிப்போட்டியில் 135.8 புள்ளிகளுடன் ஏழாவது இடம் பிடித்தார்.

தகுதி சுற்றில் ஆறாவது இடத்தில் இருந்த சிங்கராஜ், இறுதிப் போட்டியின் முதல் கட்டத்தில் தரவரிசையில் முதலிடம் பெற அற்புதமாகத் தொடங்கினார்.  இறுதிப் போட்டியில் மொத்தம் 216.8 புள்ளிகளுடன் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (SH1) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.