குழந்தைகள் முன்னிலையில் பெண் ஆய்வாளர் கைது..!

பொழுது விடிந்தால் “தொழிலாளர் தினம்” மே 1 உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகளையும், தொழிலாளர் இயக்கத்தையும் நினைவுகூரும் நாள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். இந்த தொழிலாளர் தினத்தை நாடே விடுமுறை நாளாக கொண்டாட தயாரானது. அதேபோல பெண் ஆய்வாளரும் தொழிலாளர் தினத்தை குடும்பத்துடன் கொண்டாட  தயாரானார்.

அடுத்த நாள் மே 1 புதன் கிழமை மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவனை பார்க்க திருச்சூர் செல்லும் வழியில் ஏற்கனவே பேசிய டீலிங் மூலம் கைக்கு பணம் வரப்போகிறது. ஏன் அதை விடவேண்டும் பார்த்துக் கொள்ளலாம் நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற அசட்டு தைரியத்தில் செயல்பட்ட பெண் ஆய்வாளருக்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் காட்டிய பாடம் தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு படமாக அமைகின்றதோ இல்லையோ..? மூன்று குழந்தைகளுடன் ஒரு காரை ஓட்டி பெண்ணுக்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் செய்த சம்பவம் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் இரணமாக அமையும்.

கேரள மாநிலம் கொச்சி வைட்டிலாவில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் எட்டாவது கட்டிட ஆய்வாளரான ஸ்வப்னா பணியாற்றி வருகின்றார். ஏற்கனவே வைட்டிலா மாநகராட்சி மண்டல அலுவலகம் மீது  ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்பு, எல்.டி.எஃப் கவுன்சிலர் பி.எஸ். பிஜு, மாநகராட்சியில் உள்ள ஒரு வருவாய் அதிகாரி சட்டவிரோத கட்டிடத்தை முறைப்படுத்த ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மேயர் விஜிலென்ஸ் விசாரணையை அறிவித்தார். ஆனாலும் விஜிலென்ஸ் விசாரணை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், வைட்டிலாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ஐந்து மாடி கட்டிடத்திற்கு கட்டிட அனுமதி  எண் ஒரு கட்டிட உரிமையாளர் பெற விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் ஆய்வாளரான ஸ்வப்னா அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தியுள்ளார். பின்னர், கட்டிட உரிமையாளர் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்து ஆய்வாளர் ஸ்வப்னாவை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு ஏதோதோ காரணம் கூறிய ஆய்வாளர் ஸ்வப்னா இதனை சரிசெய்ய  ஒவ்வொரு தளத்திற்கும் ரூ.25,000 செலவாகும் என தெரிவித்துள்ளார்.  ஆனால் கட்டிட உரிமையாளர் என்னால் ரூ.25,000 கொடுக்க முடியாது கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என பேரம் பேச கடைசியாக ரூ 15,000 கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பாத கட்டிட உரிமையாளர், தன்னிடம் லஞ்சம் கேட்ட கட்டிட ஆய்வாளருக்கு பாடம் புகட்ட விரும்பினார். இதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன்பேரில், விஜிலென்ஸ் அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கட்டிட உரிமையாளரிடம் கொடுத்து, ஆய்வாளர் ஸ்வப்னாவிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.

இந்நிலையில், கட்டிட உரிமையாளரும் , ஆய்வாளர் ஸ்வப்னாவை தொடர்பு கொண்டார். வழக்கமாக, நம்பகமான ஆட்கள்  மூலம் பணம் வசூலிக்கும் ஆய்வாளர் ஸ்வப்னா மறுநாள் மே தினம் என்பதால், ஸ்வப்னா திருச்சூரிலுள்ள கணவனை பார்க்க வீட்டிற்கு செல்லும்போது வழியில் இந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தார். விஜிலென்ஸ் கொடுத்த பணத்துடன் கட்டிட உரிமையாளர் ஸ்வப்னா குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கு வந்தாலும் ஸ்வப்னா வரவில்லை.

ஆனாலும் கட்டிட உரிமையாளரும், விஜிலென்ஸ் அதிகாரிகளும் பெண் ஆய்வாளரை விடுவதாக இல்லை. மீண்டும் நான்காவது இடம் குறிக்கப்பட்டது. இறுதியாக, ஆய்வாளர் ஸ்வப்னா தனது மூன்று குழந்தைகளுடன் ஒரு காரை ஓட்டி, வைட்டிலாவில் உள்ள பொன்னுருண்ணி பாலம் அருகே லஞ்சம் வாங்க முடிவு செய்தார். அந்த சமயத்தில், விஜிலென்ஸ் அங்கு மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கட்டிட உரிமையாளரிடம் இருந்து ஆய்வாளர் ஸ்வப்னா வாங்கியபோது அங்கு மறைந்து நின்று விஜிலென்ஸ் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் ஆய்வாளர் ஸ்வப்னாவின் மூன்று குழந்தைகள் காரில் இருந்ததால் திருச்சூரில் உள்ள ஆய்வாளர் ஸ்வப்னாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளை அழைத்து செல்லும்படி தெரிவித்தனர். ஆய்வாளர் ஸ்வப்னாவின் கணவர் திருச்சூரில் இருந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்தார். ஆய்வாளர் ஸ்வப்னா இவ்வளவு நேரம் காரில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்தனர். 3 குழந்தைகள் முன்னிலையில் ஆய்வாளர் ஸ்வப்னாவை 4 மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்த யாராலும் மறக்க முடியாத சம்பவம் ஆகும். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.