நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் காவல்துறை என்னை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். என்னை கைது செய்ததற்கு காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் காவல்துறை என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘காவல்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்து தனது கடமையை செய்தார் என்பதற்காக திருச்சி காவல் கண்காணிப்பாளர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது அதிகாரிகளை அச்சுறுத்துவதாகும்.
எனவே முன் ஜாமீன் மனுவை அனுமதிக்க கூடாது’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பற்றி மனுதாரர் எந்த இடத்திலும், எந்த சமூக வலைத்தளங்களிலும் தவறாக பதிவிடவில்லை. சிலர் அவதூறாக பதிவிட்டுள்ளனர். இதற்கு மனுதாரர் பொறுப்பில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சமூக வலைத்தளங்களை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். அப்படி இருக்கும் போது முன்னாள் முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள் குறித்து ஏன் அவதூறு பரப்ப வேண்டும்’’ என நீதிபதி கேள்வி கேள்வி எழுப்பினார்.