விளாதிமிர் பூட்டின்: உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்கப்பட வேண்டும்..!

இந்தியாவின் பொருளாதாரம் மற்ற எந்த நாட்டையும் விட வேகமாக வளர்ந்து வருவதால், உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதி வாய்ந்தது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் உரையாற்றிய விளாதிமிர் பூட்டின், “இந்தியா சந்தேகத்துக்கு இடமின்றி வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இந்தியாவின் 150 கோடி மக்கள், உலகின் மற்ற எந்த பொருளாதாரத்தைவிட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக உலக வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா தகுதியானது.

நாங்கள் இந்தியாவுடன் அனைத்து திசைகளிலும் உறவுகளை வளர்த்து வருகிறோம். இந்தியா ஒரு சிறந்த நாடு. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. 150 கோடி மக்கள் தொகையுடன் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்கள் அங்கு பிறக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.

ரஷ்யா – இந்தியா உறவு எங்கு, எந்த வேகத்தில் வளரும் என்பது பற்றிய நமது பார்வை இன்றைய யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் ஒத்துழைப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்புகள் வளர்ந்து வருகின்றன.

எத்தனை வகையான ரஷ்ய ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்தின் சேவையில் உள்ளன என்பதைப் பாருங்கள். இந்த உறவில் ஒரு பெரிய அளவு நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை மட்டும் இந்தியாவுக்கு விற்கவில்லை. நாங்கள் கூட்டாக வடிவமைக்கிறோம். பிரம்மோஸ் ஏவுகணை இதற்கு ஒரு உதாரணம்.

வான், கடல், நிலம் ஆகிய மூன்று நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக நாங்கள் அந்த ஏவுகணையை மாற்றினோம். இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான இந்தத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது பரவலாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த திட்டங்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் உயர் மட்டத்தை நிரூபிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் சில சிரமங்கள் இருக்கினறன. எனினும், புத்திசாலித்தனமான மற்றும் திறமையான அதன் தலைவர்கள் தங்கள் தேசங்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, சமரசங்களைத் தேடுகிறார்கள். இறுதியில் அவற்றைக் கண்டுபிடிப்பார்கள். இந்த அணுகுமுறை தொடர்ந்து வேகமெடுக்குமானால் சமரசங்களைக் காணலாம்” என விளாதிமிர் பூட்டின் தெரிவித்துள்ளார்.

அதிபர் விளாதிமிர் பூட்டின் அதிரடி உத்தரவு: அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யா..!

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அணு ஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி ரஷ்யா அதிபர் விளாதிமிர் பூட்டின் அணுஆயுத பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் உக்ரைன் உள்பட உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருந்த மோதல் என்பது தற்போது போராக மாறி உள்ளது.

ரஷ்யா, உக்ரைன் எல்லை பிரச்சனைக்கு நடுவே ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கிய போர் 3-வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்து தற்போது ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா படைகளை உக்ரைன் சமாளித்து வருகிறது. போரை கைவிட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என ரஷ்யாவுக்கு நம் நாடு உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன.

ஆனால் அதிபர் போரை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருவது விளாதிமிர் பூட்டினுக்கு பிடிக்கவில்லை.

இதற்கிடையே தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் மூலம் ரஷ்யாவுக்குள் அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா கருதுகிறது. தொடக்கம் முதலே அமெரிக்கா உக்ரைனுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை செய்து வருகிறார். அதோடு அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது.

இதற்கு ரஷ்யா தரப்பில் அவ்வப்போது அணு ஆயுதத்தை மையப்படுத்தி விடுவிக்கப்பட்ட மிரட்டலும் முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் அணுஆயுத பயிற்சிகளை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் உக்ரைன் மீதான ரஷ்யா போர் என்பது தற்போது உச்சக்கட்டத்தை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.