பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிவரை கடும் போட்டிக்கு இடையே காரை தட்டி தூக்கிய பார்த்திபன்..!

மதுரை, பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த நூற்றுக்கணக்கான காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அதில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேட்டில் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 7.35 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் கிராமக் கமிட்டி சார்பில் 6 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன. போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்.

பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் களமிறங்கினர். அதில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. அடுத்து 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் துளசிராம் 2-ஆம் இடம் பிடித்து பைக் பரிசு பெற்றார். பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்து எலக்ட்ரிக் பைக் பெற்றார்.

சிறந்த காளையாக முதல்பரிசு பெற்ற சத்திரப்பட்டி தீபக்குக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. சின்னப்பட்டி கார்த்திக் 2-வது இடம் பெற்றார். இவருக்கு அலங்கை பொன் குமார் சார்பில் நாட்டின பசுவும், கன்றும் வழங்கப்பட்டன. 3-வது இடம் பிடித்த குருவித்துறை பவித்ரனுக்கு விவசாய வேளாண் கருவி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராமுக்கும் இடையே முதலிடத்திற்கான கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி ஒரு சில சுற்றுகளில் பார்த்திபன் முதலிடம் பிடித்து காரை தட்டி தூக்கி சென்றார்.