பாக்கி பணம் கொடுக்கலனா இனி மின் விநியோகம் நிறுத்தப்படும் என வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு மின்சார விநியோகம் செய்வதில் பைரா நிறுவனம் 1,244 மெகாவாட், ராம்பால் நிறுவனம் 1,234 மெகாவாட், எஸ்எஸ் பவர் நிறுவனம் 1,224 மெகாவாட் என மின் விநியோகம் செய்து வரும் நிலையில் அதானி பவர் நிறுவனமும் 724 மெகாவாட் மின் விநியோகம் செய்து வருகின்றது.
இந்நிலையில், டாலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வங்கதேசத்தால் உரிய காலத்தில் அதானி நிறுவனத்துக்கு மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த முடியாமல் திணறி வருகிறது. வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும், சுமார் ரூ.1,500 கோடி கடன் கடிதத்தை வழங்குவதற்கும் அக்டோபர் 31 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. கிரிஷி வங்கி மூலமாக கடன் கடிதத்தை வழங்க பிபிடிபி முற்பட்டாலும், அது மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், டாலர் தட்டுப்பாடும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
நிலுவை காரணமாக, வங்கதேசத்துக்கான மின்சார விநியோகம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், நவம்பர் 7-ஆம் தேதிக்குள் நிலுவை தொகையான சுமார் ரூ.7,200 கோடி செலுத்தவில்லை எனில் மின்சாரம் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.