திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனம் மீது மேலும் ஒரு மோசடி புகார்

திருச்சிராப்பள்ளி மாநகரம் மன்னார்புரத்தில் எல்ஃபின் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திருச்சிராப்பள்ளி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ் என்பவர், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், ‘எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதத்திற்குள் 3 மடங்கு திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ரூ. 72.82 லட்சம் முதலீடு செய்தேன்.

நண்பர்கள், உறவினர்கள் மூலம் மொத்தம் ரூ. 2 கோடியே 18 லட்ச முதலீடு செய்துள்ளோம். இதை இரண்டு, மும்மடங்காக, 4 கோடியே 68 லட்ச ரூபாயை தருவேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதற்குரிய காசோலைகள் வழங்கினார்கள்.

ஆனால் அதை வங்கியில் செலுத்த சென்ற போது, அந்த அக்கவுண்ட்டில் பணம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். பணத்தை நேரடியாக சென்று கேட்டபோது, பலமுறை அலைகழித்து, திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்ட போது, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.