லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது..!?

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் காவல்துறை காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் MLA -வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை காவல்துறைக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. இத்தனை தொடர்ந்து அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை காவல்துறை முடிவு செய்து இதற்கான அன்மோல் பிஷ்னோய் கைது செய்ய மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.