தலைநகர் டெல்லியில் இன்னும் எத்தனை நிர்பயாக்கள் கொடூரமாக மரணிக்கப் போகிறார்கள்..!?

பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவில், பண்பாடு , ஆன்மீகம் , மனித உரிமை , பெண் உரிமை என என்னதான் பேசித்திருந்தாலும் , இந்தியாவில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கடும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதிலும், குற்றங்கள் குறையாத நிலையே தொடர்ந்து கொண்டே செல்வது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்படுத்துகிறது.

தெற்கு டெல்லியின் பதர்பூர் பகுதியிலுள்ள பொது கழிவறை அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றது, டெல்லியில் 35 வயது பெண் ஒருவர் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டுள்ள சம்பவம் என டெல்லியில் நடைபெற்ற சம்பவங்களை  அடுக்கிக்கொண்டே போகலாம்.

நம் நாட்டின் தலைநகரம் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்போது கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறை அதிகாரி மார்பகங்கள் வெட்டப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த மாதம் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள பழை நாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் 9 வயது  சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள தர்காவுக்கு முன்பாக விளையாட செல்வதாக கூறினார். ஆனால், ஐந்து நிமிட நடை தூரத்திலு ள்ள இடுகாட்டு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருமாறு சிறுமியை பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.  பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல்  தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்ற 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெற்றோர் மற்றும் நாடே வீதியில் நின்று  நீதி கேட்டு போராடி பிறகு குற்றவாளிகள் பிடிபட்டது நாடறிந்தது.

கடந்த மாதம் டெல்லியை உலுக்கிய சம்பவம் மக்களின் மனதில் மறையும் முன்னே டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நீண்ட நாட் கனவு சில மாதங்களுக்கு முன்புதான் நனவானது கிழக்கு டெல்லியின் உள்ள சிவில் டிபென்ஸ் காவல்துறை அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி அவர் மாயமானார். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று கொலை செய்து விட்டு உடலை வீசி விட்டு சென்று விட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு டெல்லி காவல்துறை இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். பெண் காவல்துறை அதிகாரியின் சடலத்தை மீட்ட கிழக்கு டெல்லி காவல்துறை இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவரின்  பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்துவந்ததாகக் கூறப்படும் நிஜாமுதீன் என்பவர்மீது காவல்துறைக்குச் சந்தேகம் எழவே, நிஜாமுதீனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். ஆனால், காவல்துறை தன்னைத் தேடுவது தெரிந்து தலைமறைவான நிஜாமுதீன் பின்னர், இளம்பெண்ணைக் கொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பெண் காவல்துறை போலீஸ் அதிகாரியின் பெற்றோர் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிச்சத்திற்கு வந்த நிர்பயா பாலியல் வழக்கு முதல் தற்போது நடந்த 21 வயது சபியா என்ற சிவில் டிபென்ஸ் காவல்துறை அதிகாரி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. கூட்டு பாலியல் மற்றும் கொலை வழக்கு வரை தலைநகர் டெல்லி நடந்துள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று.