ஆந்திராவில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் பேருந்தை ஒரு வயலில் இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றி, அரசு பேருந்து ஓட்டுநர் மரண மடைந்தார்.
ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாம்பசிவ ராவ். இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு சுமார் 40 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டது.
இந்நிலையில் வழியில் சாம்பசிவ ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பேருந்தை நிதானமாக சாலை ஓரத்தில் நிறுத்த முயன்றார். ஆனால் பேருந்து அருகில் உள்ள வயலில் இறங்கி நின்றது. இதையடுத்து பேருந்தின் ஸ்டீரிங் மீது கவிழ்ந்து சாம்பசிவ ராவ் உயிரிழந்தார். இதற்கிடையில் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் காயமின்றி தப்பினர். தங்கள் உயிரை காப்பாற்றிய சாம்பசிவ ராவுக்கு அவர்கள் நன்றிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தினர்.