இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம்.இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ஆம் பிற்பகல் 3 மணி அளவில் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஏவுகணைகள், போர் விமானங்கள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி நம் நாட்டின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி பேசுகையில், சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தால் இந்தியா முழுநேர போருக்கு தயாராகி வருவதாக அர்த்தம். இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் கோரி, ஷாகின் மற்றும் காஸ்னவி ஏவுகணைகள் உள்ளன. 130 அணுஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை இலக்காக வைத்துள்ளது.
எங்களிடமும் ராணுவ ஆயுதங்கள் உள்ளன. ஏவுகணைகள் வைத்துள்ளோம். அணுஆயுதம் இருக்கும். இவை அனைத்தும் வெறும் காட்சி பொருளாக மட்டும் நாங்கள் வைத்திருக்கவில்லை. நாட்டில் நாங்கள் எங்கெல்லாம் அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன் எங்களிடம் பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளது. அது உங்களை இலக்காக கொண்டு தாக்கும்” என ஹனிப் அப்பாஸி தெரிவித்துள்ளார்.