சுனில் கவாஸ்கர் சாடல்: கௌதம் கம்பீரை பாராட்டுவது என்பது ஒருவரின் காலை நக்கி பிழைப்பதற்கு சமம் ..!

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் சுமார் இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில்தான் இந்த போட்டி முடிவடையும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்து இருந்தனர். ஆனால் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் T -20 போல அபாரமாக விளையாடி வெற்றியை ருசித்தது.

இதனை பலரும் பாராட்டி வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என கூறியிருந்தார். இந்த சூழலில் ஒரு செய்தி தாளுக்கு சுனில் கவாஸ்கர் எழுதிய தலையங்கத்தில் யாராவது புதுமையாக விளையாடினாலோ வழக்கமான பாணியில் இருந்து விலகி சென்றாரோ அதற்கு புது பெயர் வழங்குவது வழக்கமாகிவிட்டது.

இது உண்மையிலேயே வருத்தமான விஷயம். முன்பெல்லாம் ஏதேனும் ஊழல் நடந்தால் கேட் என்ற வார்த்தையை பயன்படுத்தி எழுதுவார்கள். அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாட்டர் கேட் ஊழல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்தியா விளையாடும் விதத்தை பார்த்து பேஸ்பால் என்று கூறுகிறார்கள்.

மெக்குல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக வந்ததை அடுத்து அவருடைய பெயர் சேர்க்கப்பட்டு கூறப்படுகிறது. இந்திய ஊடகங்களும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததை எடுத்து கம்பால் என்று கூறுகிறார்கள். சிலர் பாஸ்பால் என்றும் எழுதுகிறார்கள்.

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடியது பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் தலைமையில் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தியா ஒன்றும் தற்போது தான் அதிரடியாக விளையாடுவது போல் பலரும் கூறி வருவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. ஏனென்றால் ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றதிலிருந்து இந்திய அணி இப்படித்தான் விளையாடி வருகிறது.

கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்று வெறும் இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. எனவே இந்தியா இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு கம்பீரை பாராட்டுவது என்பது ஒருவரின் காலை நக்கி பிழைப்பதற்கு சமமாகும். கௌதம் கம்பீர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கூட இப்படி அதிரடியாக மெக்குல்லம் போல் விளையாடியது கிடையாது.

இந்திய அணியின் இந்த அதிரடி மாற்றத்திற்கு பாராட்ட வேண்டும் என்றால் அது முழுக்க முழுக்க ரோஹித் சர்மாவை தான் சேருமே தவிர வேறு யாருக்கும் இந்த பாராட்டு கிடையாது என சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடி எழுதியுள்ளார்.