உங்களுக்கு நம்பிக்கையும் செயல்திட்டமும் இருந்தால், நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பது முக்கியமல்ல” என்று எதிர்கால தலைமுறையின் விடியலுக்கான சொற்களில் வைரங்களை வைத்துவிட்டுச் சென்ற கியூபப் புரட்சியின் விதைநெல் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவு நாள் இன்று.
உலகில் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ந்துகொண்டிருந்த நிலையில் கியூப மண்ணை முதல் பொதுவுடைமை அரசாக மாற்றிய புரட்சிப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பிரான் என்ற கிராமத்தில் வாழ்ந்த லினாரஸ் கொன்சாலஸ், ஏஞ்சல் காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ் தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ 1926 ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தார். ஃபிடல் காஸ்ட்ரோ சாண்டியாகோ டி கியூபாவில் இருந்த ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற அவர், அடுத்து பெலன் நகரத்துப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.
1945 -ம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகச் சட்டப்பள்ளியில் சேர்ந்தார். இங்குதான் ஃபிடலுக்கு எதிர்கால வாழ்வின் அடித்தளங்கள் அத்தனையும் தொடங்கப்பட்டன. கல்லூரிப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம்கொண்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, ஊழலில் திளைத்திருந்த அதிபர் ராமோன் கராவ் தலைமையிலான கியூப அரசை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
அன்று முதலே போராட்டங்கள் அவருடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. காவல்துறையால் தேடப்படும் பட்டியலில் ஃபிடலின் பெயரும் சேர்ந்துகொண்டது. மேலும் 1947 ஆம் ஆண்டு டொமினிக் குடியரசில் அந்நாட்டு மாணவர்களுடன் சேர்ந்து ரஃபேல் டிராஜிலோ ஆட்சியைக் கலைக்கும் ஃபிடலின் முயற்சி, அமெரிக்க ஆதரவுடன் தடுத்துநிறுத்தப்பட்டது.
1952 -ம் ஆண்டு கியூபாவில் கார்லஸ் ப்ரியோவின அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றினார் இதுமட்டுமின்றி மோன்கடா நகரத்தில் இருந்த ஆயுதக்கிடங்குகளைத் தகர்க்கும் முயற்சியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார். அந்த மிகப்பெரும் அதிரடி தாக்குதலுக்குப் பிறகு அக்டோபர் 16, 1953 அன்று பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய நான்கு மணி நேர உரையின் தலைப்புதான் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’. அந்தப் பேச்சு பிறகு அவரது ஜூலை 26 இயக்கத்தின் அறிக்கையாக மாறியது.
ஆயுதக்கிடங்கு தாக்குதல் முயற்சிக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட 19 மாதங்களுக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ, 1955-ல் விடுதலை செய்யப்பட்டார். 1956, நவம்பர். மெக்சிகோவில் இருந்து மிகச்சிறிய கிரான்மா படகில் சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 81 போராளிகள் கியூபாவுக்குப் பயணமாயினர். கியூபப் புரட்சி வெற்றிபெறும் 1959 ஜனவரி வரையில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்து கொரில்லா போர்முறையில் தீவிரமாக ஈடுபட்டது,
புரட்சிக்குப் பிறகு கியூபாவில் அமைக்கப்பட்ட கம்யூனிச அரசில் 1959 பிப்ரவரியில் ஃபிடல் காஸ்ட்ரோ பிரதமராகப் பொறுப்பேற்றார். 1976 முதல் 2008 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கியூபாவின் பெருமைக்குரிய அதிபராக ஃபிடல் காஸ்ட்ரோ நீடித்தார். ஃபிடல் காஸ்ட்ரோ தன் 90 வயதில் 2016 நவம்பர் 25 ஆம் தேதியன்று விண்ணுலகிற்கு செல்ல ஃபிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கையும் போர்க்குணமும், இன்று உலகமெங்கும் சமூக அரசியல் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்கும் இளைஞர்களின் மனங்களில் வெளிச்சங்களாக பரவி இருக்கின்றன.
அவரின் நினைவு நாளான இன்று நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிக முக்கியமான ஒருவராகவும் சோசலிசத்தை உருவாக்கியவர் கம்யூனிச கொள்கைகளில் மிகச் சிறப்பாக செயலாற்றி மறைந்த கியூபா முன்னாள் அதிபர் உலகம் போற்றும் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அக் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர். கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ்,ஈஸ்வரன், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.