அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து தானிய விற்பனைக் கூடங்களாக மாற்றுவோம்

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் சுமார் ஓராண்டாக போராடி வருகின்றனர். இந்த போராட்டக்களங்களை சுற்றி காவல்துறை வேலி அமைத்து இருந்தனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், கால வரையின்றி போக்குவரத்தை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து காசிப்பூர், திக்ரி எல்லைகளில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றியுள்ளனர். டெல்லி எல்லைகளில் தடுப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது என விவசாயிகள் மத்திய அரசுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

இது குறித்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி நடந்தால், நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து அவற்றை தானிய விற்பனைக் கூடங்களாக மாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.