இஸ்ரேல் எச்சரிக்கை: ஐ.நா அமைதிப்படை வீரர்கள் தெற்கு லெபனானிலிருந்து உடனடியாக வெளியேறு..!

ஐ.நா அமைதிப்படை வீரர்கள் தெற்கு லெபனானிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக சண்டையிட்டு வருகிறது.

காசாவில் கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரமாக்கி இருக்கிறது. குறிப்பாக, வடக்கு காசாவில் கடந்த 9 நாளில் 300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஹமாசின் ஆதிக்கம் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இதே போல, லெபனானின் நபாதியா நகரில் இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 1910-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்க்கெட் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. 12 குடியிருப்பு கட்டிடங்கள் 40 கடைகள் மற்றும் அஹெல் எல் குரான் மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாகின.

லெபனான் ராணுவத்திற்கு உதவ, தெற்கு லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சண்டையிட்டு தாக்குதல் நடத்துகிறது. 2-வது முறையாக நேற்றும் ஐ.நா அமைதிப்படை வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐ.நா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் கட்டரசிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை: “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்”

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். தங்களை தற்காத்து கொள்வதற்கான வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், “ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. அதற்கான விலை கொடுத்தாக வேண்டும். எங்களை தற்காத்து கொள்ள எங்களுக்கு இருக்கும் வலிமையும்,எதிராளிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியை பற்றியும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.,”என தெரிவித்தார்.

இக்கட்டான நேரத்தில் பக்கபலமாக இருந்த அமெரிக்காவுக்கும் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரான் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வரலாம் என்றும் இஸ்ரேல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.