ஸ்மிரிதி மந்தனா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையும் சேர்ந்து படைத்தார்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும்டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அணி தலைவர் மெக் லானிங், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தை அமைத்த நிலையில் ஸ்கோர் 93 ரன்னாக இருந்த போது ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய புனம் ரவுத், ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ரன்னில் இருந்த போது, மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது. இதன் காரணமாக இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆஷ்லே கார்ட்னர் 61.1 ஓவர்களில் ஸ்மிரிதி மந்தனா 216 பந்துகளில், 22 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 127 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை என்கிற பெருமையை 25 வயதான ஸ்மிரிதி மந்தனா பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையும் சேர்ந்து படைத்தார்.