கபில் சிபல் கேள்வி: மாடு கடத்தியதாக நடந்த 12 -ஆம் வகுப்பு மாணவன் கொலை பற்றி பிரதமர் வாய் திறப்பாரா..!?

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பசு கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் 12 -ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா பசு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 12 -ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். ஆனால் பசு காவலர்கள் காரை சுமார் 25 கிலோமீட்டர் துரத்திச் சென்று காரை சேதப்படுத்தியதுடன் ஆர்யன் மிஸ்ராவின் மார்பில் சுடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றது. ஆர்யன் மிஸ்ரா மீட்டு உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

12 -ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ராவின் தந்தை சியானந்த் மிஸ்ரா ஆழ்ந்த துயரத்தில் மன வேதனை அடைந்துள்ளார். இதுபோன்ற வன்முறைக்கான மூல காரணத்தை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று விமர்சித்தார். பசு கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை சுட யார் உரிமை கொடுத்தது? அப்படிப்பட்ட உரிமையை மோடி அரசு கொடுத்திருந்தால் ஏன்? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கோபத்தில் தனது கேள்விகளை கேட்டார். மேலும் என் மகன் உயிரிழப்பிற்கு நீதி விசாரணை வேண்டியுள்ளார்.

இந்நிலையில், மாடு கடத்தியதாக தவறாக நினைத்து 12-ஆம் வகுப்பு மாணவனை பசு பாதுகாவலர்கள் கொலை செய்த விவகாரம் குறித்து துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாய் திறப்பார்களா?’ என கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாநிலங்களவை எம்பியான கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘நமக்கு இது அவமானம். ஆர்யன் மிஸ்ரா 12-ஆம் வகுப்பு மாணவன். அரியானாவில் அவன் மாடு கடத்தியதாக தவறுதலாக நினைத்து பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணம், வெறுப்பை ஊக்குவித்ததுதான். இதைப் பற்றி பிரதமர், நமது துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோர் பேசுவார்களா?’’ என கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.