முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.
நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியின் அசாதாரண வாழ்க்கையை போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
கலைஞர் கருணாநிதியின் சமூக முற்போக்கான தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்ட அசையாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது. அவரது தீர்க்கமான தலைமையின் கீழ் தான், தமிழகம் ஒரு துணிச்சல்மிகு லட்சிய மாற்றத்துக்கான பாதையில் இறங்கியது.
அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்துக்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை ஒரு முன்னோடியாக உறுதியாக நிலைநிறுத்த உதவியது மற்றும் பல மாநிலங்களை பெரிய கனவு காண தூண்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்ட விரும்புகிறேன். இந்தியாவை பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஸ்டாலின் கொண்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.